யுவராஜ் சிங்கின் தாயிடம் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது!
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங்கிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளம்பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மிரட்டல் விடுத்த இளம்பெண்
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜோராவர் சிங் கடந்த 10 ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், கடந்த 2022 ஆம் ஆண்டு, பராமரிப்பாளராக ஹேமா கௌசிக் என்ற பெண்ணை யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் நியமனம் செய்திருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு, பராமரிப்பாளர் தொழிலில் சரியில்லை எனக் கூறி ஹேமா கௌசிக்கை ஷப்னம் சிங் பணிநீக்கம் செய்துள்ளார். இதனால், அவரிடம் இருந்து பணத்தை பறிக்க வேண்டும் என்று கௌசிக் திட்டம் தீட்டியுள்ளார்.
பின்பு, ஒரு வருடம் கழித்து கடந்த மே மாதம் யுவராஜ் சிங்கின் தாயாருக்கு ஹேமா அழைப்பு விடுத்துள்ளார். அப்போது, உங்களது குடும்பம் மீது பொய் வழக்குப் பதிவு செய்வேன் என்று மிரட்டி ரூ. 40 லட்சத்தை கேட்டுள்ளார்.
இது போல மறுபடியும் ஜூலை 19 ஆம் திகதியும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கு போடுவேன் எனக் கூறி வாட்ஸ்அப் மூலம் மிரட்டியுள்ளார்.
கைது செய்த பொலிசார்
இதனால் பயந்து போன யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் பணத்தை கொடுக்க அவகாசம் கேட்டுள்ளார். மேலும், இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.
பின்பு, ஹேமா கௌசிக்கிற்கு முன்பணமாக ரூ.5 லட்சம் தருவதாக கூறி பொலிசார் திட்டம் தீட்டி அவரை வரவைத்தனர். அதன்படி, டெல்லி குருகிராமில் உள்ள மாலிற்கு ரூ 5 லட்சத்தை வாங்க வந்தபோது, போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனையடுத்து, ஷப்னம் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், டிஎல்எஃப் கட்டம்-1 காவல் நிலையத்தில் அந்தப் பெண் மீது பிரிவு 384 (பணம் பறித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |