இரண்டு வீடுகளுக்கு இடையே சிக்கிய 60 வயது மூதாட்டி 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
இரண்டு வீடுகளுக்கு இடையே சிக்கிய 60 வயது மூதாட்டி 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.
மூதாட்டி மீட்பு
சென்னை மணலி காமராஜர் தெருவை சேர்ந்த 60 வயது மூதாட்டி பொம்மி. இவர் உறவினர்கள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது உறவினர்கள் நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வீட்டின் மொட்டை மாடியில் காய வைக்கப்பட்டிருந்த மாப்பை எடுக்க சென்றுள்ளார். ஆனால், இவரது வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் இடையில் உள்ள அரை அடி சந்தில் மாப் விழுந்து கிடந்துள்ளது.
அதனை எடுக்க மூதாட்டி, சந்தின் இடையே சென்றுள்ளார். ஆனால், அவரால் திரும்பி வர முடியவில்லை. பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொலிஸார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டியை மீட்டனர். இதில், சிறு காயம் அடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |