பெண்கள், சிறுமிகளின் வாழ்வை சீரழிக்கும் தலீபான் அரசு! லண்டன் உரிமைகள் குழு குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து வருவதாக உரிமைகள் குழு தனது ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் சட்ட விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
குறிப்பாக பெண்களுக்கு மேல்நிலைக் கல்வி பயில தடை, ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தலீபான்களின் இந்த நடவடிக்கைகளினால் லட்சக்கணக்கான பெண்கள், சிறுமிகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான உரிமையை இழந்துவிட்டதாக லண்டனின் உரிமைகள் குழு ஒன்று தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், மெதுவான வேகத்தில் மரணம் என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, தலீபான் ஆட்சியின் கீழ் உள்ள பெண்கள், இந்த அடக்குமுறை விதிகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பெண்கள் எவ்வாறு அச்சுறுத்தப்பட்டனர், எவ்வாறு கைது செய்யப்பட்டனர், எப்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், எந்த விதத்தில் சித்திரவதை செய்யப்பட்டனர் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.
ednews.net
இதற்கிடையில், இதுகுறித்து பேசிய அம்னஸ்டி சர்வதேச பொதுச்செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் கூறுகையில், ' 'ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கையகப்படுத்தி ஒரு வருடத்திற்குள்ளாகவே, அவர்களின் கொடூரமான கொள்கைகள் மில்லியன் கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான அவர்களின் உரிமையை பறித்துவிட்டது' என தெரிவித்துள்ளார். (ANI)
PC: AFP photo)