40 நிமிடங்களுக்கு முன்பே வேலைக்கு வந்த இளம்பெண்: வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்
ஸ்பெயின் நாட்டில், 40 நிமிடங்கள் முன்கூட்டியே சீக்கிரமாக வேலைக்கு வந்த இளம்பெண்ணொருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் முடிவு
ஸ்பெயின் நாட்டில், இளம்பெண்ணொருவர் வேலை துவங்கும் நேரத்துக்கு 40 நிமிடங்கள் முன்னதாகவே அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

7.30 மணிக்கு அலுவலகம் துவங்கும் நிலையில், அவர் 6.45 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் வேலைக்கு வந்துள்ளார்.
நிர்வாகம் பலமுறை அவரை எச்சரித்தும், அவர் சீக்கிரமாக வேலைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
2023ஆம் ஆண்டில் மட்டும் 19 முறை சீக்கிரமாக வேலைக்கு வந்துள்ளார் அவர். ஆகவே, அவரை அந்த நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அந்த 22 வயது இளம்பெண்.
முன்கூட்டியே வேலைக்கு வருவது நல்லதுதானே நாம் நினைக்கலாம். ஆனால், அந்த நிறுவனமோ, அவர் நிர்வாகத்தின் விதிகளுக்கு இணங்கவில்லை என வாதம் முன்வைத்துள்ளது.

நீதிமன்றமும் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளது. ஸ்பெயின் தொழிலாளர் சட்டப்படி, அந்த இளம்பெண், நிர்வாகத்தின் உத்தரவை மீறியதாக தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
அவர் வேலை செய்ய விருப்பம் காட்டியதில் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் அந்த இளம்பெண் விதிகளுக்கு இணங்க மறுத்ததே தவறு என்றும், ஆகவே, அவரை வேலையை விட்டு நீக்க நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |