ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த 3 பெண்கள்., விடாமுயற்சியால் படித்து Group 1 தேர்வில் சாதனை
தமிழகத்தில் உள்ள திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய 3 பெண் ஊழியர்கள் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு நித்யா
தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவரது மகள் நித்யா (26) பிஎஸ்சி வேளாண்மை படித்துள்ளார்.
இவர், Group 4 தேர்வில் வெற்றி பெற்று கடந்த 2020 -ம் ஆண்டு முதல் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். அதோடு நிறுத்தாமல் Group 2 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றினார்.
அதன்பின்னர், கிடைத்த நேரத்தில் படித்து Group 1 தேர்வில் வெற்றி பெற்று 10 -ம் இடத்தை பிடித்துள்ளார். தற்போது, நித்யா உதவி ஆட்சியராக பொறுப்பேற்கவுள்ளார்.
இதுகுறித்து நித்யா கூறுகையில், "Group 1 தேர்வில் தமிழகத்தில் இருந்து 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வந்த 3 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளோம். அரசு வேலையில் இருந்தாலும் தொடர்ந்து படித்து வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.
ஈரோடு சுபாஷினி
ஈரோடு மாவட்டம் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த காளியப்பசாமி மகள் சுபாஷினி (26). இவரும் Group 2 தேர்வில் வெற்றி பெற்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலையில், Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் 49 -ம் இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது இவர் பணிபுரிந்து வந்த கூட்டுறவுத் துறையிலேயே துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
இது குறித்து சுபாஷினி கூறுகையில், "நான் வேலைக்கு சென்று மீதமுள்ள நேரத்தில் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்பட பலரும் எனக்கு ஊக்கத்தை கொடுத்தனர்" என்றார்.
திருப்பூர் பிரியதர்ஷினி
திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). இவர், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலையில், Group 1 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் 35-ம் இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது இவர் வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பணி செய்ய இருக்கிறார். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறுகையில், "வேலைக்கு சென்றுவிட்டு கிடைக்கும் நேரத்தில் தவறாமல் படித்தேன். தற்போது வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |