பணம் பணம்னு அலையாதீங்க! ஜெயிலர் படம் பார்த்த பின்பு கடிதம் எழுதி தமிழர் தற்கொலை
தமிழக மின் ஊழியர் ஒருவர் பணம் பணம் என்று அலைய வேண்டாம், அதனை தாண்டி நிறைய சந்தோஷங்கள் உள்ளது என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்ய நிச்சயதார்த்தம்
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்து உள்ள மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் எஃப்ஆர்எஃப்சிஎஃப் (FRFCF) என்ற பிரிவில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இதனையடுத்து, கோபிநாத்திற்கும் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, நிச்சயதார்த்த அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுப்பதற்காக கோபிநாத் பெற்றோர் சென்றிருந்தனர்.
தற்கொலை
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இரவு காட்சியை பார்த்து விட்டு கோபிநாத் வீட்டில் தனியாக உறங்கினார். மறுநாள் காலையில் கோபிநாத்தின் தந்தை வேணு, செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், கோபிநாத் போனை எடுக்கவில்லை.
பின்னர், பக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு கோபிநாத்தின் தந்தை போன் செய்துள்ளார். அப்போது, உறவினர்கள் கோபிநாத் வீட்டிற்கு சென்று அவர் இருக்கும் கதவை தட்டிய போது கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் புடவையை வைத்து தூக்கில் தொங்கியபடி கோபிநாத் இருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வேணுவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கல்பாக்கம் கவால்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்பு, கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர்.
சிக்கிய கடிதம்
இதனையடுத்து, கோபிநாத்தின் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையில், கோபிநாத் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அவர் அந்த கடிதத்தில்,"நிச்சயம் செய்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். என்னை மன்னித்து விடு. நான் உன்னைவிட்டு போகிறேன்.
பணம் பணம் என்று அலைய வேண்டாம். பணம் மட்டும் வாழ்க்கையில்லை. அதையும் தாண்டி நிறைய சந்தோஷங்கள் இருக்கிறது. நான் இறந்த பிறகு வரும் மத்திய அரசின் பணத்தை என்னுடைய தாயாரிடம் கொடுத்துவிடுங்கள். என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை.
இந்த பூமியில் யாரும் பெரிய ஆள் கிடையாது. எல்லோரையும் விட்டு விடைபெறுகிறேன். இப்படிக்கு வேறு வழி இல்லாத கோபிநாத் ஆத்மா" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |