கரும்புத் தோட்டத்தில் இளைஞரின் சடலம்! புதைக்கப்பட்ட இளம்பெண்.. விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தில் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி இறந்த சம்பவத்தால் பதற்றம்
காதலனின் உடலைக் கைப்பற்றிய பொலிசார், காதலியின் உடலைத் தோண்டி எடுக்க முடிவு
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், அவர் காதலித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டம் ரவ்ட்ஹலி கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில், இளைஞர் ஒருவரின் சடலம் ஆடைகள் இன்றி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிசார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த இளைஞரின் பெயர் அங்கித் (18) என்பது தெரிய வந்தது.
அவரது தந்தையிடம் விசாரித்தபோது, தனது மகன் முஜிபுல்லா என்பவரின் வீட்டில் டிராக்டர் வாகனம் ஒட்டி வந்ததாகவும், நேற்று முன் தினம் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
பின்னர் முஜிபுல்லாவின் வீட்டிற்கு சென்ற பொலிசார் நடத்திய விசாரணையில், முஜிபுல்லாவின் மகள் அமினா திடீரென உயிரிழந்துவிட்டதால் அவரை புதைத்துவிட்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது அங்கித் மற்றும் அமினா இருவரும் காதலித்து வந்ததும், அவர்களது காதலுக்கு அமினாவின் சகோதரர்கள் இர்பான், இர்ஷத் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது.
மேலும், இருவரும் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த பொலிசார், அமினாவின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ரவ்ட்ஹலி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.