மன்னித்துவிடு, என் உடலை இங்கேயே புதைத்துவிடு! காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து இவர், திவ்யா (21) என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
காதல் தம்பதிக்கு குழந்தை இல்லாதது குறையாக இருந்துள்ளது. மேலும் சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் திவ்யா விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கணவர் தூங்கிக்கொண்டிருந்த சமயம் திவ்யா பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்ற அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தற்கொலைக்கு முன்பு திவ்யா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், 'மாமா என்னை மன்னித்துக்கொள். எனக்கு வாழ பிடிக்கவில்லை. நீ வேலா வேலைக்கு சாப்பிடு. நான் இறந்தால் என் உடலை இங்கேயே புதைத்துவிடு. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே காரணம், என்னை மன்னித்துவிடு' என எழுதியிருந்தார்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் இரண்டு ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.