உப்பு சத்து அதிகமாக இருந்தால் இது நடக்கும்! Google தகவலை நம்பி இளைஞர் மரணம்
தமிழக மாவட்டம் மதுரையில், உப்பு சத்து அதிகமாக இருந்தால் இறக்க நேரிடும் என்ற கூகுளின் தகவலை நம்பி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலில் இளைஞர்
மதுரை மாவட்டம், பசுமலை அன்னை மீனாட்சிநகர் கோல்டன் சிட்டி 5 -வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (30). இவர் பொறியியல் படிப்பு படித்துள்ளார். இவர், வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கு, கடந்த 30 ஆம் திகதி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரபல தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உப்புச்சத்து அதிகமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
பின்னர், விஜயகுமார் இது பற்றி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், விஜயகுமாரின் பெற்றோர் அவரை அடிக்கடி சமாதானபடுத்தியுள்ளனர்.
கூகுளில் தேடிய பின் தற்கொலை
இதனையடுத்து, உப்புசத்து அதிகமாக இருந்தால் என்ன ஆகும் என்று விஜயகுமார் கூகுளில் தேடியுள்ளார். அப்போது, அதில் உப்புச்சத்து அதிகமாக இருந்தால் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும் என்று சில கருத்துக்கள் இருந்துள்ளது. அதை பார்த்த விஜயகுமார், மனவேதனையிலும், பயத்திலும் இருந்துள்ளார்.
இதனால், அவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயகுமார் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |