அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட நீங்களும் காரணம்... இந்தியா, சீனா மீது குற்றச்சாட்டு
ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் மீது அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
புடினை ஆதரிப்பதன் விலை
உக்ரைனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் 50 சதவீத வரி விதிப்பை குறிப்பிட்ட லிண்ட்சே கிரஹாம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஆதரிப்பதன் விலையை இந்தியா தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது என்றும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கும் இதே போன்ற விதிகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் புடினின் போர் முன்னெடுப்புகளை ஆதரிக்கும் இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகளே, உங்கள் கொள்முதல் தற்போது சிறார்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்ததைக் கண்டு நீங்கள் இப்போது எப்படி உணருகிறீர்கள்? என தமது சமூக ஊடக பக்கத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புடினை ஆதரிப்பதால், இந்தியா பெரும் விலையைக் கொடுத்து வருகிறது. எஞ்சியவர்களே, மிக விரைவில் உங்களுக்கும் இந்த அனுபவம் உறுதி என கிரஹாம் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் வீழ்ச்சி உறுதி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் கொடூர தாக்குதலை முன்னெடுத்ததில் 4 சிறார்கள் உட்பட 23 பேர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே கிரஹாம் இந்தியா மற்றும் சீனா மீது கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
ரஷ்யா இந்த போரை முன்னெடுத்துச் செல்வதன் பின்னணியில், அதன் மலிவு எண்ணெய் வாங்கும் நாடுகளின் ஆதரவினால் மட்டுமே என கிரஹாம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் இல்லை என்றால், ரஷ்யாவின் வீழ்ச்சி உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற ரஷ்ய எண்ணெய் வாடிக்கையாளர்களுக்கு பாடம் புகட்டினால் மட்டுமே உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வரும் என்றும் கிரஹாம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |