காதலியை பெண் கேட்டு சென்ற 21 வயது இளைஞர்! சரமாரியாக தாக்கிய தந்தை.. அடுத்து நிகழ்ந்த விபரீதம்
காதலியை பெண் கேட்டு சென்ற இளைஞரை தாக்கிய மாணவியின் தந்தை
அடிவாங்கிய அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 21 வயது இளைஞர்
தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் பெண் கேட்டு சென்ற இடத்தில் காதலியின் தந்தை தாக்கியதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ்(21). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது வீட்டில் சாம்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் சாம்ராஜ் காதல் தோல்வியால் உயிரிழந்ததாக தெரிய வந்தது. அதன் பின்னர் சாம்ராஜின் பெற்றோர், தங்கள் மகனை மாணவியின் தந்தை தாக்கியதால் ஏற்பட்ட அவமானத்தால் தான் தற்கொலை செய்துகொண்டதாக கூறினர்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இரண்டு ஆண்டுகளாக குறித்த மாணவியை சாம்ராஜ் காதலித்து வந்துள்ளார். அப்போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை சாம்ராஜ் தனது செல்போனில் வைத்துள்ளார்.
இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே, உடனடியாக உறவினர் ஒருவருக்கு தங்கள் மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். மேலும், தன் வீட்டிற்கு பெண் கேட்டு வருமாறு சாம்ராஜை அழைக்கும்படி மாணவியின் தந்தை மகளிடம் கூறியுள்ளார்.
காதலியின் பேச்சை நம்பிய சாம்ராஜ், தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார். அங்கு சாம்ராஜை மட்டும் உள்ளே அழைத்துச் சென்ற மாணவியின் தந்தை வெங்கடேசன், அவரது செல்போனை பறித்து அதில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள், குறுந்தகவல்களை அழித்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு சாம்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். பின் எச்சரிக்கை செய்து சாம்ராஜை அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த சாம்ராஜ் வீட்டில் யாரும் இல்லா சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து சாம்ராஜை தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.