தமிழர் ஒருவர் நடத்தும் YouTube Channel -க்கு கோடிக்கணக்கில் அபராதம்.., பின்னணியில் இருக்கும் விவகாரம்
சேவா பாரதி அறக்கட்டளைக்கு ரூ.1.01 கோடி நஷ்ட ஈடு வழங்க YouTube சேனல் ஒன்றிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ன விவகாரம்?
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர், கருப்பர் தேசம் என்ற YouTube சேனலை நடத்தி வருகிறார்.
கடந்த 2020 -ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிஸார், அவர்களை துன்புறுத்தியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருப்பர் தேசம் யூடியூப் சேனலில் கருத்து ஒன்றை வீடியோவாக வெளியிட்டது. அதில், சேவா பாரதி அமைப்பு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தது.
இதன்பின்னர், யூடியூப் நடத்தி வரும் சுரேந்திரன் மீது சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரான வழக்கறிஞர் ரபு மனோகர் என்பவர் மனு அளித்தார்.
அந்த மனுவில், "எங்களது அமைப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறது. மக்களிடத்தில் எங்களுக்கு நல்ல பெயர் உள்ளது.
ஆனால், கருப்பர் தேசம் என்று யூடியூப் சேனலை நடத்தி வரும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் எங்களது அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சாத்தான்குளம் கொலை வழக்குடன் தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
எனவே, எங்கள் அமைப்புக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
உத்தரவிட்ட நீதிமன்றம்
இந்த வழக்கானது நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆனால், எந்தவொரு பதிலையும் எதிர்தரப்பு அளிக்கவில்லை. இதனால், சேவா பாரதி அமைப்புக்கு, 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், அந்த அமைப்பு குறித்து பேசவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |