உதயநிதியால் யூடியூபர் இர்ஃபான் காப்பாற்றப்பட்டாரா? சர்ச்சையை கிளப்பும் அதிமுக
அமைச்சர் உதயநிதியின் நண்பர் என்பதால் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இர்ஃபான் சர்ச்சை விவகாரம்
பிரபல யூடியூபர் இர்ஃபான், திருமணம் செய்து கொண்டு பல்வேறு வீடியோக்களை மனைவியுடன் இணைந்து வெளியிடுவார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்க பார்ட்டி வைத்துள்ளார். அப்போது, ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை அறிவித்தார்.
இவர், தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருந்த நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொன்டு குழந்தையின் பாலினத்தை அறிவித்துள்ளார்.
இதனால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக மருத்துவத்துறை முடிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.
இதையடுத்து, யூடியூபில் வெளியிட்ட வீடியோவை நீக்கி இர்ஃபான் மன்னிப்பு கோரினார்.
இதனிடையே, அரசியல், சினிமா பிரபலங்களிடமும் இர்ஃபான் பேட்டி எடுத்துள்ளார். அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒருவர் ஆவார்.
அதிமுக சர்ச்சை
இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு யூடியூபர் இர்ஃபான் எவ்வளவு நெருக்கம் என்று யூடியூபில் பார்க்கவில்லையா?
அவங்களோட நண்பர்கள், குடும்பத்தினர், கட்சிக்காரர்கள் என்ன தவறு செய்தாலும் எந்த சட்டமும் பாயாது. இதுவே நீங்களும் நாங்களும் தவறு செய்திருந்தால் உடனே கைது, ஜெயில் தான். அதோடு குண்டாஸ் சட்டமும் பாயும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |