ஐரோப்பாவில் இருந்து அதிக ஆயுதங்கள்: ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்பின் உறுதி
ஐரோப்பாவிலிருந்து கூடுதல் வான் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற உக்ரைனுக்கு உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
இணைந்து செயல்படுவார்கள்
ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க முடியாமல் உக்ரைன் திணறிவரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் இந்த உறுதியை அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ட்ரம்பும் ஜெலென்ஸ்கியும் சுமார் 1 மணி நேரம் நீண்ட தொலைபேசி உரையாடலை முன்னெடுத்துள்ளனர். இதில் பல முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரு தலைவர்களும் சரியான பாதையில் முன்னேறுவதாகவே ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் இனி இணைந்து செயல்படுவார்கள் எனவும் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெளிப்படையான உரையாடல்
இதனிடையே, விவாதிக்கப்பட்ட தகவல்கள் குறித்த துல்லியமான விளக்கத்தை அளிக்குமாறு வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸிடம் நான் கேட்டுக்கொள்வேன் என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் வெளிப்படையான உரையாடலை நடத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.
போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படிகளில் ஒன்று எரிசக்தி மற்றும் பிற பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதாகும். அப்படியான ஒரு நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |