ஜெலென்ஸ்கியின் தலைமை சட்டவிரோதம்... அர்த்தமற்ற சமாதான ஒப்பந்தம்: கோபத்தில் புடின்
உக்ரேனிய அரசாங்கம் சட்டவிரோதமானது என்றும் அவர்களுடன் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவது அர்த்தமற்றது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தலைமை
போர் நிறுத்தம் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் திட்டம் ஒரு வரைவு ஒப்பந்தமாக இல்லாமல் விவாதத்திற்காக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தொகுப்பாக இருந்தது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அது எதிர்கால ஒப்பந்தங்களின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் என்றும் புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தெரிவு செய்யப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்து தேர்தலை நடத்த மறுத்து வருவதால் உக்ரைனின் தலைமை சட்டபூர்வமான தன்மையை இழந்ததாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இராணுவச் சட்டத்தின் கீழ் இருக்கும்போதும், ரஷ்யாவிற்கு எதிராக தனது பிரதேசத்தையும் மக்களையும் பாதுகாக்கும்போது தேர்தல்களை நடத்த சட்டம் அனுமதிப்பதில்லை என்று உக்ரைன் நிர்வாகம் பதிலளித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா பரிசீலித்து வந்தாலும், விவாதிக்க வேண்டிய பிற விடயங்களும் உள்ளன என்று புடின் தெரிவித்துள்ளார். இரு தரப்பும் இந்த விவகாரத்தில் தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே முடிவுக்கு வர முடியும் என்றார்.

வெளியேற வேண்டும்
மேலும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களிலிருந்து உக்ரேனிய துருப்புக்கள் விலகினால் போர் நிறுத்தப்படும் என்றும் புடின் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், உக்ரேனிய துருப்புகள் வெளியேற மறுத்தால், இராணுவ நடவடிக்கையால் அதை நாங்கள் சாதிப்போம் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, எந்தவிதமான சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் பரிசீலிப்பதற்கு முன்பு,
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா பகுதிகள் முழுவதிலும் இருந்து உக்ரைன் துருப்புகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று புடின் நிபந்தனை வைத்திருந்தார்.

இதில் ரஷ்யா இதுவரை ஆக்கிரமிக்காத பகுதிகளும் அடங்கும். அத்துடன் நேட்டோவில் இணைய உக்ரைனுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுடன், பிரான்ஸ், ஜேர்மனி உட்பட மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனில் களமிறங்குவதையும் புடின் எதிர்த்துள்ளார்.
இதனால், ஒருகட்டத்தில் உக்ரைனை ரஷ்யாவின் கீழ் கொண்டுவர முடியும் என புடின் நம்புவதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |