உக்ரைனில் முக்கிய நகரில் மக்களை வெளியேற உத்தரவிட்ட ஜெலென்ஸ்கி: உக்கிரமடையும் போர்
ரஷ்யாவுடன் கடுமையான சண்டை நடந்துவரும் நிலையில், கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுமாறு Zelensky உத்தரவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, இன்னும் டான்பாஸ் பகுதியில் உள்ள போர் மண்டலங்களில் சிக்கியுள்ளவர்கள், லுஹான்ஸ்க் பகுதி உட்பட, வெளியேற வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறிப்பிட்ட பகுதிகளில் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் போர் மண்டலங்களில் சிக்கியுள்ளதுடன், வெளியேறவும் மறுத்து வருகின்றனர்.
ஆனால் அந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும், நடவடிக்கைகள் துரிதப்படுத்தவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெளியேறினால் மட்டுமே ரஷ்ய படைகளின் கைகளில் சிக்காமல் இருப்பீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியிருப்புகளை விட்டு வெளியேற மறுக்கும் மக்களை கட்டாயப்படுத்துங்கள், குடும்பங்கள் என்றால் அவர்களுக்கு விளக்குங்கள் என ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கான அரசாங்க முடிவு உள்ளது, எல்லாம் ஒழுங்கமைக்கப்படுகிறது. அப்பகுதி மக்களின் முடிவு மட்டுமே தெரிய வரவேண்டும், இதுவரை முடிவெடுக்காதவர்கள் துரிதமாக முடிவெடுங்கள், உங்களுக்கான அனைத்து உதவிகளும் அரசு முன்னெடுக்கும் எனவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
நாம் ரஷ்யா அல்ல. அதனால்தான் ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம். முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்றவும், ரஷ்யர்களின் பயங்கரவாதத்தை முடிந்தவரை கட்டுப்படுத்தவும் கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இப்பகுதியின் இயற்கை எரிவாயு விநியோகம் அழிக்கப்பட்டதால் குளிர்காலம் தொடங்கும் முன் வெளியேற்றம் முன்னெடுக்கப்பட வேண்டும் என துணை பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளார்.