ஆயுதங்கள் மட்டுமே ரஷ்யாவுக்கு புரியும் மொழி! எந்த பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது..ஜெலென்ஸ்கி ஆவேசம்
போர் தொடர்பிலான அமைதி ஒப்பந்தத்தில் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ராணுவ உதவி
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டிவிட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிக ராணுவ ஆதரவை ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த வாரம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து இதுதொடர்பாக பேசினார்.
@AP
அமைதி உடன்படிக்கை
இந்த நிலையில் ரஷ்யாவுடனான சாத்தியமான சமாதான உடன்படிக்கையில், உக்ரைனின் எந்தவொரு பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், 'எங்கள் பிராந்தியத்தை விட்டுக்கொடுப்பது மாஸ்கோ மீண்டும் வருவதை குறிக்கும். கணிக்கப்பட்ட வசந்தகால தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ரஷ்யாவின் தாக்குதல்கள் ஏற்கனவே பல திசைகளில் இருந்து நடக்கின்றன.
எவ்வாறாயினும், உக்ரேனியப் படைகள் ரஷ்யாவின் முன்னேற்றங்களை எதிர் தாக்குதல்களைத் தொடங்கும் வரை தொடர்ந்து எதிர்த்து நிற்கும். நிச்சயமாக, நவீன ஆயுதங்கள் அமைதியை விரைவுபடுத்துகின்றன. ஆயுதங்கள் மட்டுமே ரஷ்யாவுக்கு புரியும் மொழி' என தெரிவித்துள்ளார்.