ஐரோப்பாவின் மெத்தனம்... உக்ரேனிய மக்களின் அவஸ்தைக்கு காரணம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தற்போது நான்கு வாரங்களை கடந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் எந்த நடவடிக்கைகளையும் தாமதப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய கவுன்சில் உச்சி மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்ட சேதங்களை பட்டியலிட்ட ஜெலென்ஸ்கி, இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு ஆதரவளித்துவரும் ஐரோப்பாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யாவின் படையெடுப்பை தடுக்க ஐரோப்பா தாமதித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மீதும், அதன் தலைவர்கள் மீதும், நெருக்கமான கோடீஸ்வரர்கள் மீதும் நீங்கள் பொருளாதார தடைகளை விதித்தீர்கள், அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
இது உண்மையில் துணிவான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, ஆனால் இந்த நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வாய்ப்புகள் இருந்தது எனவும், ரஷ்யா மீது முன்னரே நடவடிக்கைகள் எடுத்திருந்தால், போருக்கு செல்ல துணிந்த்கிருக்காது எனவும் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக்கொள்ள அண்டை நாடுகள் ஆதரவளிப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். உண்மையில் ஐரோப்பாவின் மெத்தனமே உக்ரைன் மக்களின் தற்போதைய அவஸ்தைக்கு காரணம் எனவும் ஜெலென்கி குறிப்பிட்டுள்ளார்.