3 லட்சம் படை வீரர்களை கூடுதலாக அனுப்ப ரஷ்யா திட்டம் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
Zelensky warns Russia mobilizing 3,00,000 troops to Ukraine war: உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்த நகரவே குறித்து ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
3 லட்சம் படை வீரர்கள்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 3 லட்சம் படையினரை கூடுதலாக உக்ரைன் போருக்கு அனுப்பும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ரஷ்யா ஏற்கனவே 2,67,000 படைவீரர்களை இழந்துள்ளது. அதில் 1,55,000 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும், அவர்கள் டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு புதிய படையினரை அனுப்புவார்கள்” என்று கூறியுள்ளார்.
ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ஜெலென்ஸ்கி, “இந்த 3 லட்சம் புதிய படைவீரர்களையும் நாங்கள் அழித்துவிடுவோம். டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷ்யாவால் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உக்ரைன் படைகள் டொனெட்ஸ்க் பகுதியின் 20 சதவீத இடங்களை, குறிப்பாக ஸ்லாவியன்ஸ்க் மற்றும் கிரமடோர்ஸ்க் போன்ற தொழிற்சாலை நகரங்களை பாதுகாத்து வருகின்றன. மேலும், ரஷ்யா கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளிலும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
வான்வழி பாதுகாப்பு குறித்து பேசிய அவர், “2023-இல் 675 Patriot ஏவுகணைகள் கிடைத்தன. ஆனால் இந்த ஆண்டு 264 மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் முடிவுகளால் பாதிக்கப்படுகிறது” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உக்ரைன் Patriot ஏவுகணைகளை உரிமம் பெற்று தயாரிக்கலாம் என்று கூறியிருந்தாலும், பின்னர் அந்த யோசனையை வாபஸ் பெற்றதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் Aster ஏவுகணைகள் குறைவாக கிடைக்கின்றன. இதனால், உக்ரைன் தனது சொந்த ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்கி, ரஷ்யாவின் பல்வேறு இலக்குகளை தாக்கி வருகிறது.
ஜெலென்ஸ்கி, “இந்த போருக்கு முடிவு காணும் வாய்ப்பு அடுத்த கோடைக்காலம் வரை உள்ளது. அதற்குப் பிறகு அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்” என்று கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |