ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம்... ஸ்டார்லிங்க் தொடர்பில் உக்ரைனுக்கு மீண்டும் இடியை இறக்கிய ட்ரம்ப்
Volodymyr Zelenskyy feels betrayed: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளை உக்ரைன் ராணுவம் அணுகுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, டொனால்ட் ட்ரம்பால் தான் தனிப்பட்ட முறையில் வஞ்சிக்கப்பட்டதாக உணர்வதாக வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
காட்டிக்கொடுக்கப்பட்டதாக
லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனிய ஜனாதிபதி, நான்கு ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பிறகு ட்ரம்ப் எதிர் தரப்பைத் தெரிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்;

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க முடிவு செய்துள்ள ட்ரம்பால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இரு தரப்பு உறவுகள், இந்தக் குற்றச்சாட்டால் மேலும் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டவுனிங் தெருவில் பிரதமர் ஆன்டி பர்னாமுடனான சந்திப்புக்கு முன்னதாக, ஜெலென்ஸ்கி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார். அதில், ஸ்டார்லிங்க் அணுகல் தொடர்பான திடீர் கட்டுப்பாடு வேண்டுமென்றே விதிக்கப்பட்டதா என்றும், ட்ரம்ப்பால் தான் காட்டிக்கொடுக்கப்பட்டதாக உணர்கிறாரா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ஜெலென்ஸ்கி, உண்மையில் அவ்வாறே நடப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் இது வெறும் என் உணர்ச்சிகள் அல்லது என் மனநிலைகளை விட சற்றே சிக்கலானது என்றார்.
மேலும், உக்ரைன் ஒரு வலுவான கூட்டாளியை இழந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய விடயம் என்றும் ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார். இதனிடையே, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பானது உக்ரைனில் 100mph-கு மேற்பட்ட வேகத்தில் இயங்கவில்லை என்பதை இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக, திடீர் தாக்குதல் நடத்த உக்ரைன் பயன்படுத்திய பெரும்பாலான ட்ரோன்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. மேலும், இது கீவ் நகரின் மீது ரஷ்யாவின் ஜெட்-இயக்க தாக்குதல் ட்ரோன்கள் குண்டுவீசுவதைத் தடுக்கும் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பைப் பாதித்தது என்பது பின்னர் தெரியவந்தது.
இது தொடர்பில் ஜெலென்ஸ்கி பதிலளிக்கையில், அவர்கள் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
அமெரிக்காவிலிருந்து மிரட்டல்
டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவு ஏராளமான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும்... நிச்சயமாக, மக்கள் கொத்தாகக் கொல்லப்படுவார்கள் என்றார்.
இரண்டாவது இரவாக, அமெரிக்காவிடமிருந்து எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி, ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைகளை ஏவிய வேளையில் இந்த திடீர் சேவை முடக்கம் ஏற்பட்டது.

மட்டுமின்றி, பல ஆண்டுகளாக, ரஷ்ய தாக்குதல்கள் நடைபெறவிருந்த சமயங்களில் அமெரிக்கா உக்ரைனுக்கு உளவுத் தகவல்களை வழங்கி வந்துள்ளது.
இதனிடையே, தனது நிர்வாகம் உளவுத் தகவல்களைப் பகிர்வதைக் குறைத்துவிட்டதாகக் கூறப்படுவதை ட்ரம்ப் மறுத்தார். ஆனால், எதிர்காலத்தில் உளவுத் தகவல் பரிமாற்றம் குறைக்கப்படலாம் என்று அமெரிக்காவிலிருந்து தங்களுக்கு மிரட்டல்கள் வந்ததாக ராணுவ ஆலோசகர்கள் தெரிவித்ததாக ஜெலென்ஸ்கி கூறினார்.
உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளார்; டீசல் விலை உயர்வுக்கு இத்தாக்குதல்களே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதே உலகளாவிய எரிசக்தி விலைகளில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக புடினை ஆதரிக்கும் ட்ரம்ப் 2025ல் முதல் முறையாக ஜெலென்ஸ்கியைச் சந்தித்த வேளையில், போரில் உக்ரைன் வெற்றிபெறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
மட்டுமின்றி, அதன் பிறகான பல சந்தர்ப்பங்களில் ரஷ்யாவை ஆதரிக்கும் போக்கையே ட்ரம்ப் எடுத்து வந்துள்ளார். ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் சீனாவை தண்டிக்க மறுத்த ட்ரம்ப், இந்தியா மீது சிறப்பு வரிகள் விதித்தார்.
தற்போது டீசல் இறக்குமதி விவகாரத்தில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், உக்ரைனுக்கு வெளிப்படையாகவே துரோகம் செய்துள்ளார்.

இதனிடையே, புதன்கிழமை டவுனிங் தெருவில் பிரதமர் பர்னாம், ஜெலென்ஸ்கியைச் சந்தித்தார். மட்டுமின்றி, ரஷ்யா மீது மேலும் தடைகள் விதிப்பதற்கும், இராணுவ உதவியை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கும் அவர் அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார்.
ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் பயன்படுத்தும் பிரித்தானியாவின் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை அந்நாட்டிற்கு வழங்கும் பணியை விரைவுபடுத்துவதாக பர்னாம் உறுதியளித்தார். மேலும், கூடுதல் ஆதரவிற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.