தரையில் விழுந்து வெடித்த ஹெலிகாப்டர்: தொழிலதிபர் உட்பட 6 பேர் உயிரிழப்பு
Zimbabwe Helicopter Crash 6 Dead: ஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரேயின் தென்கிழக்கே மரோண்டேரா மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 6 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் உயிரிழந்தவர்களில் அந்நாட்டின் முக்கிய தொழிலதிபர் விக்னெல் சிவாயோ(Wicknell Chivayo) மற்றும் அவரது மனைவி உட்பட 4 பயணிகளும் இரண்டு விமானிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் நிக் மங்வானா X தளத்தில் வெளியிட்ட பதிவில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பியவர்கள் யாரும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து மீட்பு குழுவினர் தொடர்ந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பின்னர் இந்த விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.