போலி பாஸ்போர்ட் மூலம் 100 பேர் வெளிநாடு பயணம்! திமுக கவுன்சிலரின் கணவர் கைது
போலி பாஸ்போர்ட்டை தயாரித்து 100-க்கும் மேற்பட்டோரை வெளிநாடு அனுப்பிய திமுக ஒன்றிய கவுன்சிலரின் கனவரை பொலிசார் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா
சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி ஒருவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர், கடந்த 7 ஆம் திகதி இந்தியாவைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் மலேசிய செல்வதற்கு முயன்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட், சீட்டுமோசடி மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவினர், அந்தோணிசாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், "கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகள் வரை மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் அந்தோணிசாமி வேலை பார்த்து வந்துள்ளார். பின்பு, சில காரணங்களுக்காக அவரை அந்நாட்டு அரசு மலேசியாவில் நுழைய தடை விதித்தது. இதனால், அவர் இந்தியா திரும்பி வந்தது" தெரியவந்துள்ளது.
திமுக கவுன்சிலரின் கணவரின் உதவி
இதனையடுத்து, அந்தோணிசாமி மலேசியா செல்ல முடியாமல் திணறிய போது தான் பெரோஸ்கான் என்பவரின் உதவி கிடைத்துள்ளது.
பின்பு, அந்தோணிசாமியை தனது ஏஜென்ட்டான சையது அபுதாஹீரிடம் பெரோஸ்கான் அனுப்பி வைத்தார். அங்கு அவர், அந்தோணிசாமி என்ற பெயரை ஆண்டனி என்று மாற்றி போலியான ஆதார்கார்டு, பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து மலேசிய செல்ல முயன்றதால் தான் குடியுரிமை அதிகாரியிடம் சிக்கியுள்ளார்.
பின்பு, அந்தோணிசாமி அளித்த தகவலின் அடிப்படையில் பெரோஸ்கான் என்வரை பொலிசார் கைது செய்தனர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்களம் பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் என்பது அம்பலமானது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த ஏஜென்ட் சையது அபுதாஹீர் தலைமறைவானார்.
போலி பாஸ்போர்ட்கள் பறிமுதல்
பெரோஸ்கான் மற்றும் சையது அபுதாஹீர் ஆகிய இருவரும் தஞ்சாவூர் மற்றும் மலேசியாவில் உள்ள பாஸ்போர்ட் அதிகாரி ஒருவரை வைத்துக்கொண்டு போலியான பாஸ்போர்ட் தாயரித்து அதன் மூலம் பலரை வெளிநாடு செல்ல உதவியுள்ளனர்.
மேலும், இவர்களது வீட்டில் சோதனை செய்த போலீசார், "105 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் போலி ஆவணங்கள்,போலியான அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் முத்திரைகள், கணினி, பணமாக 57,000 ஆயிரம் ரூபாய், 1000 சிங்கப்பூர் டாலர், 15500 தாய் பட், 25 மலேசியன் ரிங்கிட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், போலியான பாஸ்போர்ட் தயாரித்த இருவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |