ஒடிசா ரயில் விபத்து: நூலிழையில் உயிர் பிழைத்த 110 பேர்- தப்பியது எப்படி?
ஒடிசாவில் விபத்திற்குள்ளான ரயிலில் பயணம் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியில் சரக்கு ரயிலும், கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
அத்துடன் தடம்புரண்ட பெட்டிகளின் மீது யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் மோதி மூன்றாவது ரயிலாக விபத்தில் சிக்கியது.
இதில் 288 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிர் பிழைத்த பக்தர்கள்
இந்நிலையில் விபத்திற்குள்ளான ஹவுரா ரயிலில் ஆன்மிக பயணம் செய்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
இவர்கள் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள சம்மேட் ஷிகர்ஜி ஜெயின் கோவிலுக்கு ஆன்மீக பயணம் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்கள் பெங்களூருவில் இருந்து ஹவுரா விரைவு ரயிலில் கிளம்பும் போது விபத்திற்குள்ளான ரயிலின் பின்புற பெட்டிகளில் இருந்துள்ளனர், ஆனால் விசாகப்பட்டினத்தில் ரயிலின் என்ஜின் மாற்றப்படும் போது 110 பக்தர்கள் பயணம் செய்த 3 ரயில் பெட்டிகளும் முன்வரிசைக்கு வந்தது.
பாலாசூர் ரயில் விபத்தின் போது ஹவுரா விரைவு ரயிலில் 2 பொதுப் பெட்டிகளும் ஒரு பிரேக் வேனும் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது, நல்லவேளையாக கடவுளை தரிசிக்க சென்ற 110 பக்தர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.