தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்
தற்போது கர்ப்பிணியாக உள்ள சிலர் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டிலேயே யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
இதில், சில வேளைகளில் தாய் மற்றும் சேய்க்கு சிக்கலாகி விடுகிறது.
கர்ப்பிணிக்கு உடைந்த பனிக்குடம்
இதே போல், சீனாவை சேர்ந்த 13 வயது சிறுவன் வீட்டிலே வைத்தே தனது தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளார்.
தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு, 37 வார கர்ப்பமாக உள்ள தனது தாயின் பனிக்குடம் உடைந்து விட்டதாகவும், ஆம்புலன்ஸ் அனுப்புமாறும் இரவு நேரத்தில் அழைப்பு வந்துள்ளது.
ஆம்புலன்ஸ் வர சிறுது நேரமான நிலையில், தொலைபேசியில் அழைத்த 13 வயது சிறுவன், இப்பொழுதே குழந்தையின் தலையை தன்னால் காண முடிகிறது என்றும், தாயின் நிலை கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
அவசர மையத்தில் பணியில் இருந்த துணை மருத்துவர் சென் சாயோஷூனு, அந்தச் சிறுவனுக்குத் தொலைபேசியில் தனது தாயுடன் எப்படி இருப்பது, ஆறுதல் கூறுவது மற்றும் பிரசவத்திற்கு உதவுவது குறித்துப் பயிற்சி அளித்துள்ளார்.
பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்
அவரின் வழிகாட்டுதலை பின்பற்றிய சிறுவன், தாயின் நிலையை உன்னிப்பாக கவனித்து, தாய் சரியான நிலைக்கு வர உதவியுள்ளான்.
இதனையடுத்து அந்த சிறுவனின் தாய்க்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் தாய் மற்றும் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தற்போது தாய் மற்றும் குழந்தை நலமுடன் உள்ளனர். இந்த ஆண் குழந்தை அந்த பெண்ணிற்கு மூணாவது குழந்தை ஆகும்.
இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில், சிக்கலான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு தாய் மற்றும் தனது சகோதரனின் உயிரை காப்பாற்றிய 13 வயது சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதே வேளையில், பிரசவ நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுடன், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் தனியாக விட்டது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |