மண்ணில் இருந்து கிடைத்த 15.34 கேரட் வைரம்: சிறுவயது நண்பர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்தியாவில் இரண்டு சிறு வயது நண்பர்கள் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் இருந்து அபூர்வ வைரத்தை கண்டெடுத்துள்ளனர்.
சிறுவயது நண்பர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம், பண்ணா(Panna) மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் கட்டிக் மற்றும் சஜித் முகமது என்ற இரண்டு சிறுவயது நண்பர்கள் சில வாரங்களுக்கு முன்பு ஒரு சிறிய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

குளிர்கால அதிகாலையில் நிலத்தில் பணிகளை தொடங்கிய போது நண்பர்கள் இருவரும் பளபளப்பான கல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக அதை அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில், அது 15.34 கேரட் எடையுள்ள உயர்தர ஜெம் குவாலிட்டி(Gem-quality) வைரம் என்பதை உறுதி செய்துள்ளனர்.
வைரத்தின் மதிப்பு
கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த ஜெம் குவாலிட்டி வைரமானது சந்தை மதிப்பீட்டின் படி சுமார் 50 முதல் 60 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என வைர மதிப்பீட்டாளர் அனுப்பம் சிங் தெரிவித்துள்ளார்.

கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த வைரம் விரைவில் அரசின் காலாண்டு ஏலத்தில் விற்பனைக்கு வரும் என்றும், இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரத்தின் இறுதி விலையானது சர்வதேச டொலர் மதிப்பு மற்றும் ரப்பப்போர்ட்(Rapaport) அறிக்கையின் அடிப்படையில் அமையும் என தெரியவந்துள்ளது.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறு வயது நண்பர்கள் இருவருக்கும் இந்த புதையலானது புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |