ட்ரக்கில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்: பிரான்ஸ் சிறையில் வாடும் கேரளாவைச் சேர்ந்த இருவர்
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றால், குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் வெளிநாடு சென்ற கேரளாவைச் சேர்ந்த இரண்டுபேர், சம்பந்தமே இல்லாத ஒரு நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்!
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற இந்தியர்கள்
இருவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த டிஸ்னி டி ஜோசப் (42) மற்றும் ஆண்டனி ஷாஜி ஆகிய இருவரும் ஸ்லோவேகியா நாட்டில் ட்ரக் சாரதிகளாக வேலை செய்துவருகிறார்கள்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 14ஆம் திகதி, ஸ்பெயினிலிருந்து இத்தாலி நோக்கி ட்ரக்கில் சென்றுகொண்டிருந்த அவர்களை, பிரன்சிலுள்ள Frejus என்னும் துறைமுக நகரத்தில் பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
வழக்கமான சோதனைதான் என எண்ணி ஜோசப்பும் ஆண்டனியும் ஆவணங்களைக் காட்ட, ட்ரக்கை சோதனையிடவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள் பொலிசார்.
ட்ரக்கை சோதனையிடும்போது, ஒரு சீல் செய்யப்பட்ட பார்சலுக்குள் 147 கிலோகிராம் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த ட்ரக்கும், ட்ரக்கிலிருந்த பொருட்களும், Yaras Air Cargo Transport என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. அந்த நிறுவனத்தில்தான் ஜோசப்பும் ஆண்டனியும் வேலை செய்கிறார்கள்.
ஆனால், ட்ரக் சிக்கிய தகவல் கிடைத்ததும், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான Rachid Benali என்னும் மொராக்கோ நாட்டவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தப்பியோடிவிட்டார்.
ஜோசப்பும் ஆண்டனியும் பிரான்சிலுள்ள Marseille நகரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய தூதரக அதிகாரிகள் ஜோசப்பையும் ஆண்டனியையும் மீட்பதற்காக பிரான்ஸ் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், மிக அதிக அளவிலான போதைப்பொருள் பிடிபட்டதால், Rachid Benali சிக்கும்வரை, ஜோசப்பும் ஆண்டனியும் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
ஆக, வெளிநாட்டுக்குச் சென்றால் குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என ஸ்லோவேகியா நாட்டுக்குச் சென்ற ஜோசப்பும் ஆண்டனியும் பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டிருக்க, கேரளாவில் அவர்களுடைய குடும்பங்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |