26 முறையும் தோல்வியை ருசித்த கோடீஸ்வரர்! இந்த ஆண்டும் பெயில் தானாம்
சீனாவில் பல்கலைகழக நுழைவுத்தேர்வை எழுதி 27வது முறையாக தோல்வியை கண்டுள்ளார் 56 வயதான கோடீஸ்வரர் லியாங் ஷி.
சீனாவின் மிக முக்கியமான கோடீஸ்வரர் லியாங் ஷி, பரம்பரை சொத்துக்கள் மற்றும் கடும் போராட்டத்துக்கு பின்னர் சொந்தமாக பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே படிப்பதில் ஆர்வம் அதிகம், ஆனால் குடும்ப சூழல் காரணமாக நினைத்ததை செய்யமுடியவில்லை.
குறிப்பாக கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பது லியாங் ஷி-யின் நீண்டவருட கனவாக இருந்தது.
வயதை தாண்டி விட்டாலும், கல்லூரி கனவை கெட்டியாக பிடித்துக் கொண்டார் லியாங் ஷி.
இதற்காக சிச்சுவான் பல்கலைகழகத்தை நாடிய போது, வயது ஒரு பொருட்டேஇல்லை, எந்த வயதிலும் படிக்கலாம் என நிர்வாகம் கூறிவிட, சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்.
ஆனாலும் என்னவோ 27 முறை நுழைவுத்தேர்வு எழுதியும் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது.
இந்த முறையாவது வெற்றி பெற்றுவிடுவார் என உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரலை செய்த போதும் கூட தோல்வியையே ருசித்து வருகிறார்.
ஆனால் மனம் தளராமல் மீண்டும் அடுத்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகிவிட்டார் லியாங் ஷி.
அவர் கூறுகையில், நிறைய சம்பாதித்துவிட்டேன், செல்வம் குவிந்துள்ளது, ஆனாலும் இளவயது ஆசை என் நெஞ்சோரம் நெருடிக்கொண்டிருக்கிறது.
ஜெயிக்காமல் போனால் கூட பரவாயில்லை, தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பேன், முயற்சிகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |