இந்திய தயாரிப்பு தடுப்பூசியை ஏற்றுக்கொண்ட 7 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்!
இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை கட்டுப்பாடுகள் இல்லாமல் அனுமதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 7 உறுப்பு நாடுகள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு எதிராக உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், வெளிநாடு செல்வோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், European Medicines Agency அங்கீகரித்துள்ள ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சென் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வோருக்கு மட்டுமே கட்டுப்பாடுகளற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
அதனால், இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டி வந்தது. அஸ்ட்ராசெனெகாவின் இந்திய பதிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்க மருத்துவந்தது.
இந்நிலையில், இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்தன.
இது, கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழில் வர்த்தகர்கள் எனப் பலதரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
EMAவின் பரிந்துரைப் பட்டியலில் கோவாக்சின், கோவிஷீல்டு இடம்பெறாத நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும், உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டுக்குள் எந்த தடுப்பூசியைப் போட்டவர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் அதிகாரம் அளித்திருக்கிறது.
இத்தகைய சூழலில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, ஜேர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய 7 நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் தங்கள் நாட்டினுள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன.