பக்கத்தில் இருப்பவை சடலங்கள் என்பது தெரியாமல் கட்டிப்பிடித்து உறங்கிய குழந்தை: தாய்லாந்து கொடூரத்தில் தப்பிய பிஞ்சு உயிர்...
தன் பக்கத்தில் படுத்திருக்கும் தன் தோழிகள் கொல்லப்பட்டுவிட்டது தெரியாமல் அவர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்கியிருக்கிறாள் ஒரு சின்னஞ்சிறு குழந்தை.
தாய்லாந்தில் 23 குழந்தைகள் உட்பட 36 பேர் முன்னாள் பொலிசார் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆச்சரியவிதமாக ஒரு குழந்தை தப்பியிருக்கிறாள்.
கடந்த வியாழக்கிழமை, அதாவது அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தாய்லாந்தில் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. Panya Khamrab (34) என்னும் முன்னாள் பொலிசார் ஒருவர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும், வாகனம் ஒன்றைக் கொண்டு மோதியும் 36 பேரைக் கொலை செய்தார், 10 பேரைக் காயப்படுத்தினார்.
கொல்லப்பட்டவர்களில் 23 பேர் குழந்தைகள், ஒரு பெண் எட்டு மாத கர்ப்பிணி!
கடைசியில், அவர் எதற்காக இந்த கொடூரக் கொலைகளை செய்தார் என்பது உலகத்துக்குத் தெரியவரும் முன்பே, தன் மனைவியையும், மனைவிக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த மகனையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
தாய்லாந்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அபூர்வம் என்பதால் நாடே பதறிப்போயிருக்கிறது.
இந்நிலையில், அந்த குழந்தைகளின் நடுவே படுத்திருந்த ஒரு குழந்தை மட்டும் அற்புத விதமாக உயிர் தப்பியிருக்கிறது.
Emmy (3) என்னும் அந்தக் குழந்தை எப்படி உயிர் தப்பியது என்பது யாருக்கும் தெரியவில்லை. கொல்லப்பட்ட குழந்தைகளின் நடுவே ஒரு குழந்தை பக்கத்தில் கிடந்த தன் தோழி கொல்லப்பட்டுவிட்டாள் என்பது தெரியாமல் அவளைக் கட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்ட மீட்புக்குழுவினர், பதறிப்போய், அவள் இந்த இரத்தத்தை எல்லாம் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக சட்டென அவளது முகத்தை துணி ஒன்றால் மறைந்து அங்கிருந்து வேறொரு இடத்துக்குத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்.
Emmy எப்படி உயிர் தப்பினாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவளுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
சொல்லப்போனால், அந்த கொடூர சம்பவம் நடந்த பின் வழக்கம் போல சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்ல முயல்கிறாளாம் அவள். அத்துடன், தனது தோழிகளைக் குறித்தும் ஆசிரியைகளைக் குறித்தும் அவள் கேட்கிறாளாம்.
முதலில் தயங்கினாலும், பின்பு மெதுவாக அவளிடம் அவர்கள் எல்லாரும் இறந்துபோய்விட்டார்கள் என Emmyயின் பாட்டி விளக்கியும், அந்த பிஞ்சுக் குழந்தையால் மரணம் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லையாம்.
அவள் வளர்ந்து வரும்போது ஒருவேளை என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்வாள். ஆனாலும், அந்த விடயங்கள் அவளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது.