நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது
நடிகர் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கிட்டத்தட்ட மனுத்தாக்கல் செய்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நடிகர்கள் ரியல் ஹீரோக்கள் ஆக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என்று விஜய்யை கடுமையாக சாடிய நீதிபதி சுப்பிரமணியம், விஜயின் வரிவிலக்கு மனுவையும் தள்ளுபடி செய்தார்.
அதோடு மட்டுமில்லாமல் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அந்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தனக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மீதான விமர்சனங்களை தீர்ப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம்.
வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்தவில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள்.
இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது, குற்றவாளி போல காட்டியுள்ளது என்று நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் குறித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டது.