சட்டவிரோதமாக போதைப்பொருள்.. பெங்களூரு பண்ணை வீடு பார்ட்டிக்கு கட்டணம் ரூ.50 லட்சம்?
பெங்களூரு ரேவ் பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின் அடைப்படையில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரேவ் பார்ட்டி
இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் இருக்கும் பண்ணை வீட்டில் கடந்த 20 -ம் திகதி ரேவ் பார்ட்டி (DJ Dance) நடந்திருக்கிறது. இந்த பார்ட்டிக்கான கட்டணம் ரூ.50 லட்சம் என்று சொல்லப்படுகிறது.
'Sunset to Sunrise’ எனும் பெயரில் நடைபெற்ற பார்ட்டியில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியது.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அதிகாலை 3 மணிக்கு பார்ட்டியில் நுழைந்து, தடைசெய்யப்பட்ட MDMA மாத்திரைகள், கொகைன் போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், பார்ட்டியை ஒருங்கிணைத்தவர் உட்பட 5 பேரையும், போதைப்பொருள் விநியோகம் செய்த 3 பேரையும் கைது செய்தனர்.
திரை பிரபலங்கள்?
இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஹேமா உள்பட ஆந்திர, கன்னட நடிகர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், நடிகை ஹேமா அதனை மறுத்துள்ளார்.
மேலும், நடிகை ஆஷி ராய் கூறுகையில், "நான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக இந்த பார்ட்டிக்கு வந்தேன். இது ரேவ் பார்ட்டி என்றால் எனக்கு என்னவென்று தெரியாது. மேலும், நடிகை ஹேமாவை பார்ட்டியில் பார்க்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பார்ட்டிக்கு வெளியே பல சொகுசு கார்கள் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். அதில், ஆந்திர எம்.எல்.ஏ ஒருவரின் காரும் இருந்ததும் என்று கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |