துருக்கி ஜனாதிபதி எர்டோகனுக்கு ஹிட்லர் மீசை: 16 வயது சிறுவனை கைது செய்த பொலிஸார்
ஜேர்மன் நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரின் மீசையை துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் புகைப்படத்திற்கு வரைந்த 16வயது சிறுவனை அந்த நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீண்டும் ஜனாதிபதி
துருக்கியில் கடந்த மே 15ம் திகதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், 52.2 சதவீத வாக்குகளை பெற்று தாயிப் எர்டோகன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் எர்டோகனுக்கு தற்போது கிடைத்துள்ள வெற்றி மேலும் 5 ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறது.
இதற்கிடையில் துருக்கியின் ஜனாதிபதியாக ஏர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சில நிமிடங்களில் டோலருக்கு எதிரான துருக்கியின் ரூபாய் மதிப்பு லிரா சரிவை சந்தித்துள்ளது.
16 வயது சிறுவன் கைது
இந்நிலையில் தேர்தலின் போது சாலையில் ஒட்டப்பட்ட எர்டோகனின் புகைப்படத்திற்கு ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் மீசையை வரைந்த 16 வயது சிறுவனை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அத்துடன் அதில் எர்டோகனுக்கு எதிரான அவதூறான கருத்துகளும் அதில் எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் சிறுவனின் வீட்டை கண்டறிந்து விசாரணை நடத்தினர், அப்போது மீசை வரைந்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி எர்டோகனை அவமதித்தாக கடந்த ஆண்டு மட்டும் 16,000க்கும் அதிகமானோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.