விமானத்தில் பயணிக்க பயம்! 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த இளைஞர்
விமானத்தில் செல்ல பயம் ஏற்பட்ட காரணத்தால் இளைஞர் ஒருவர் 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்பாமல் இருந்து வந்துள்ளார்.
சொந்த ஊர் திரும்பாத இளைஞர்
துபாய் சர்வதேச விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
இங்கு ஒரு வெளிநாட்டு ஊழியர் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து வருகிறார். அவரது குடும்பத்தினர் அவரை சொந்த ஊருக்கு திரும்பி வரச் சொன்னாலும் அவர் செல்லாமல் அவரது பணியில் தொடர்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரது சகோதரர் அவரை அழைத்து வருவதற்காக துபாய் விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அப்போதும் அவர் விமானத்தில் ஏறாமல் தவிர்த்துள்ளார்.
இது பலமுறை நடந்ததால் அவரது குடும்பத்தினர் பெரிய அளவில் கவலை அடைந்துள்ளனர்.
வினோத பாதிப்பு
ஒரு கட்டத்தில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு ஏரோபோபியா(Aerophobia) என்ற நோய் இருப்பது தெரியவந்தது. இது 'பறக்கும் பயம்' என்று அழைக்கப்படுகிறது.
இதையடுத்து சமீபத்தில் அவர் சொந்த ஊர் திரும்ப விமான நிலையத்திற்கு வந்தபோது, பயத்தில் அங்குமிங்கும் ஓடியுள்ளார்.
பின்னர் விமான நிலைய அதிகாரிகள் அவரின் உடலை பரிசோதித்து, மனநிலையை தேற்றி, விமானத்தில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக துபாய் விமான நிலைய அதிகாரி அகமது அப்துல் பகி கூறுகையில், "அவருக்கு ஏரோபோபியா இருந்தது. அவருக்கு தேவையான ஆலோசனை வழங்கினோம். பின்னர் அவர் விமானத்தில் செல்ல சம்மதித்தார். டிக்கெட் முன்பதிவு செய்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்தோம்" என்றார்.
இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் விமான நிலைய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |