நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் பெட்ரோல் கசிவு., அவசரமாக ஸ்வீடனில் தரையிறக்கம்
அமெரிக்காவிலிருந்து 311 பேருடன் டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், திடீரென எரிபொருள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்திலிருந்து 292 பயணிகள் (8 குழந்தைகள்), 15 கேபின் பணியாளர்கள் மற்றும் 4 விமானிகள் உட்பட 311 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி நோக்கி வந்துகொண்டிருந்தது.
போயிங் 777-300 ER விமானம் ஸ்வீடன் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் ஒரு எஞ்சினிலிருந்து எரிபொருள் கசிந்தது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஜின் செயலிழந்த நிலையில், விமானிகள் உடனடியாக விமானத்தை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லோம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.
ஆய்வின்போது, என்ஜின் இரண்டின் வடிகால் மாஸ்டிலிருந்து எண்ணெய் வெளியேறுவது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தும் என டிஜிசிஏ அதிகாரி தெரிவித்தார்.
எஞ்சினில் எரிபொருள் கசிவு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பயணிகளை டெல்லிக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வருகிறது.