அடர்ந்த காட்டில் விமான விபத்து... 4 சிறுவர்கள் ஆறு வாரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
அடர்ந்த அமேசான் காட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில், ஆறு வாரங்களுக்கு பின்னர் அதில் பயணித்த 4 சிறுவர்கள் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.
அமேசான் காட்டில் விபத்தில் சிக்கிய விமானம்
கொலம்பியாவில் மே 1ம் திகதி குட்டி விமானம் ஒன்றில் பயணித்த குடும்பம் ஒன்று அமேசான் காட்டில் விபத்தில் சிக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தற்போது ஆறு வாரங்களுக்கு பின்னர், நான்கு சகோதரர்கள் 13, 9, 4 மற்றும் 1 வயதுடையவர்கள் அதிசயமாக உயிருடன் மீட்கபட்டுள்ளனர்.
@AFP
இவர்களுடன் பயணித்த, இவர்களின் தாயார் மற்றும் விமானி தொடர்புடைய விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பிய இராணுவத்தால் விமானம் மீட்கப்பட்டபோது, சிறுவர்கள் தொடர்பான எந்த அறிகுறியும் தென்படவில்லை, அவர்களைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில், விபத்து நடந்து 40 நாட்களுக்கு பின்னர் அந்த சிறுவர்களை உயிருடன் மீட்டதாக கொலம்பிய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் நால்வரும் தண்ணீர் அருந்தாமலும், பூச்சிகள் கடித்த நிலையிலும் காணப்பட்டாலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏதுமின்றி தப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் கொலம்பிய ஜனாதிபதி தரப்பில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மொத்த நாடும் நிம்மதியடைந்துள்ளது என்றார். 40 நாட்களுக்கு முன்னர் அடர்ந்த காட்டுக்குள் மாயமான சிறார்கள் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அவர் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Credit: Ministry of National Defense of Colombia
40 நாட்களுக்கு பின்னர் உயிருடன்
தற்போது சிறுவர்கள் நால்வரும் ராணுவ மருத்துவர்களால் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியா பகுதியில் அமைந்துள்ள அமேசான் வனப்பகுதிக்கு தாயாரும் நான்கு பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், 40 மீற்றர் உயரம் வரை ராட்சத மரங்கள் வளரும் குவாரியார் மற்றும் காக்வெட்டா இடையேயான எல்லையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் கன மழை என்பது மிக சாதாரணம் என்றே கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, விமான விபத்து தொடர்பில் தகவல் கிடைத்தும் மீட்பு நடவடிக்கைகள் தாமதாமகியுள்ளது. இறுதியில் விபத்து நடந்த பகுதியும், விமானமும் கண்டுபிடிக்கப்பட்டாலும், சிறார்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லாமல் சிறப்பு ராணுவம், பூர்வகுடி தன்னார்வலர்கள் என ஒரும் பெரும் படையே தடுமாறியது.
Credit: Ministry of National Defense of Colombia
மூன்று ஹெலிகொப்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த நிலையில் தான் மீட்புப்படையினர் தற்காலிக தங்குமிடம் மற்றும் குழந்தைகளின் உடைமைகள் மற்றும் பாதி தின்ற உணவு பண்டங்கள் என சிலவற்றைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். மேலும், அந்த சிறார்கள் Huitoto பூர்வகுடியை சேர்ந்தவர்கள்.
பொதுவாக இந்த சமூகத்தினர் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் உள்ளிட்டவற்றில் கடுமையான பயிற்சிகள் மேற்கொள்பவர்கள்.
இதனாலையே அந்த சிறார்கள் நால்வரும் 40 நாட்கள் காட்டுக்குள் உயிர் தப்பியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.