பாகிஸ்தான் ஓடி பேஸ்புக் காதலனை கரம்பிடித்த இந்திய பெண் அஞ்சு.., ஒரு மாத கால விசாவில் இந்தியா வருகை
பேஸ்புக் மூலம் காதல் கொண்ட நபரை பாகிஸ்தான் சென்று திருமணம் செய்த இந்திய பெண் மீண்டும் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
அஞ்சுவின் பேஸ்புக் காதல் முதல் திருமணம் வரை
உத்தரபிரதேசத்தில் புந்தேல்கண்ட் பகுதியில் ஜலான் மாவட்டத்தில் உள்ள கைலோர் கிராமத்தில் பிறந்தவர் 34 வயதான அஞ்சு. இவர், ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் வசித்து வந்தார். இவரது கணவர் அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் அஞ்சுவும், பாகிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான நஸ்ருல்லா என்பவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். நஸ்ருல்லா மருத்துவத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் அப்பர் திர் மாவட்டத்தில் உள்ள தனது பாகிஸ்தான் நண்பரான நஸ்ருல்லாவைச் சந்திக்க அஞ்சு சென்ற போது, அவரை பாகிஸ்தான் பொலிசார் விசாரணை செய்தனர். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததால் அஞ்சு விடுவிக்கப்பட்டார்.
மேலும், நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே, நஸ்ருல்லா வீட்டுக்கு சென்ற அஞ்சு, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்திருந்தார். அதே நேரத்தில், தனது தோழியாகிய அஞ்சுவை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என நஸ்ருல்லா கூறிய ஒரே நாளில் அனைத்தும் மாறின.
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சட்டப்பூர்வமாகச் சென்ற அஞ்சு , இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பாகிஸ்தானிய காதலரான நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார். இப்போது தனது பெயரான அஞ்சுவை பாத்திமா என்று மாற்றியிருக்கிறார்.
திர் பாலாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நஸ்ருல்லாவின் குடும்ப உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், அஞ்சு என்ற பாத்திமா இந்தியா திரும்பவுள்ளதாக அவரது கணவர் நஸ்ருல்லா தெரிவித்திருந்தார்.
மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்திடம் இருந்து NOC சான்றிதழுக்காக ஏற்கனவே விண்ணப்பத்திற்கும் நிலையில், அதற்காக காத்திருப்பதாக கூறினார். வாகா எல்லையில் ஆவணங்கள் முடிந்தவுடன் அஞ்சு இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என்றும், அவர் தனது குழந்தைகளை இந்தியாவிற்கு சென்று பார்த்துவிட்டு பாகிஸ்தான் திரும்புவார் என்றும் அவரது கணவர் கூறியிருந்தார்.
இந்தியாவுக்கு அஞ்சு வருகை
இந்நிலையில், அஞ்சு தனது குழந்தைகளை பார்ப்பதற்காக வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது, அவரது கணவர் நஸ்ருல்லா வழியனுப்பி வைத்தார். அப்போது, அவரிடம் நடத்திய பல்வேறு விசாரணைக்குப் பிறகு அவர் அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ANI
பர்தா அணிந்திருந்தபடி வந்த அஞ்சு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், "நான் எனது குழந்தைகளையும், குடும்பத்தையும் பார்ப்பதற்கு இந்தியா வந்திருக்கிறேன். எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் வந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை தவிர சொல்வதற்கு ஏதும் இல்லை" என்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விமானத்தில் டெல்லிக்கு சென்றார்.
இதனிடையே, அஞ்சுவின் முதல் கணவர் அர்விந்த் தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான பிவாடியில் இருந்து காலி செய்து வேறொரு கிராமத்திற்கு சென்றுள்ளார். தற்போது, இந்தியா வந்திருக்கும் அஞ்சு அவர்களை எப்படி கண்டுபிடிப்பார்கள் என தெரியவில்லை. இந்தியாவில் ஒரு மாதம் தங்கிக்கொள்ள அஞ்சுவுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |