திமுக அமைச்சர்கள் அச்சம்! பாரத மாதா சிலை அகற்றியதற்கு அண்ணாமலை தாக்கு
பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூலமாக விருதுநகர் அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதால் நள்ளிரவில் பாரத அன்னையின் சிலையை அகற்றியுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
நள்ளிரவில் அகற்றப்பட்ட சிலை
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக பாஜக அலுவலகம் திறக்கப்பட்டது. அங்கு, நேற்று மாலை பாரத மாதாவின் சிலை நிறுவப்பட்டது.
ஆனால், இதற்கு வருவாய்த்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து, அனுமதியின்றி அமைக்கப்பட்ட சிலையை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனால், அங்கு நேற்றிரவு 100க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் குவிந்ததையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆனால், நள்ளிரவே வருவாய்த்துறையினர் மற்றும் பொலிசார் பாஜக அலுவலக வளாகத்துக்குள் சுவர் ஏறி குதித்து பாரத மாதாவின் சிலையை அகற்றி பறிமுதல் செய்தனர்.
திமுக அமைச்சர்களுக்கு அச்சம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்வீட்டில், "விருதுநகர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறி குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்கு கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.
ஊழல் திமுக அரசின் அவலங்களை 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை" எனக் கூறியுள்ளார்.
விருதுநகர் @BJP4TamilNadu மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
— K.Annamalai (@annamalai_k) August 8, 2023
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |