கைலியின் எம்பாப்பேவை கேலி செய்த அர்ஜென்டினா கோல்கீப்பர் மீது முறைப்படி புகார்
கைலியன் எம்பாப்பேவை கேலி செய்ததற்காக அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் (Emiliano Martinez) டிசம்பர் 18 அன்று நடந்த FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்ஸை தோற்கடித்ததில் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
ஆபாசமான சைகை
போட்டியில் சிறந்த கோல்கீப்பருக்கு வழங்கப்படும் கோல்டன் க்ளோவ் (Golden Glove) கோப்பையை வென்ற பிறகு மார்டினெஸ் முகம் சுழிக்கக்கூடிய அளவில் ஆபாசமாக ஒரு சைகை காட்டினார். அவரது நடத்தை சர்ச்சையானது. அதற்கு அவர், எதிரணியினர் தன்னை கடுமையாக கேலி செய்ததால் விருதை வாங்கியபிறகு அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அப்படி செய்ததாக கூறினார்.
இதையும் படிங்க: மெஸ்ஸி இதுவரை வென்றிடாத ஒரே ஒரு மதிப்புமிக்க விருது., 20 பேர் மட்டுமே அதை வென்றுள்ளனர்
கைலியன் எம்பாப்பேவை கேலி செய்த மார்டினெஸ்
இதையடுத்து, உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் வெற்றி அணிவகுப்பின் போது கோல்கீப்பர் மார்டினெஸ், 24 வயதே ஆகும் பிரான்சின் இளம் வீரர் கைலியன் எம்பாப்பேவை (Kylian Mbappe) கேலி செய்யும் விதமாக, அவரது முகத்துடன் குழந்தை பொம்மையை கையில் வைத்துக்கொண்டு ஊர்வலம் சென்றார்.
இந்த இரண்டு சைகைகள் காரணமாக, நட்சத்திர கோல்கீப்பர் மார்டினெஸ் தனது செயல்களுக்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
முறைப்படி புகார்
இந்நிலையில், அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் வெற்றி அணிவகுப்பின் போது எம்பாப்பேவை கோல்கீப்பர் கேலி செய்ததாக பிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் நோயல் லெ கிரேட் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தில் (AFA) முறைப்படி புகார் அளித்துள்ளார்.
"அர்ஜென்டினா அணிக்கு நான் கடிதம் எழுதினேன், ஒரு விளையாட்டு போட்டியின் சூழலில் இதுபோன்ற அதிகப்படியான செயல்களை நான் அசாதாரணமாகக் காண்கிறேன், இது எந்த மாதிரியான நடத்தை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை" என்றும் "இது வெகுதூரம் செல்கிறது. அனால், எம்பாப்பேவின் அமையான நடத்தை முன்மாதிரியாக உள்ளது." என்று நோயல் லெ கிரேட் கூறினார்.