துப்பாக்கி முனையில் சம்பவம்... மாணவர்கள் நிலை குறித்து கதறும் பெற்றோர்: தொடரும் அக்கிரமம்
வடமேற்கு நைஜீரியாவில் ஒரு உறைவிடப் பள்ளியில் இருந்து 140 மாணவர்களை சில துப்பாக்கி ஏந்தியவர்கள் கடத்திச் சென்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் பெரும்பாலும் கிராமங்களைத் தாக்கி கொள்ளையடிக்கவும், கால்நடைகளைத் திருடவும், பணம் திரட்டும் பொருட்டு கடத்தவும் செய்து வருகின்றன.
ஆனால் தற்போது, ஆண்டின் தொடக்கத்திலிருந்து அவர்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அதிகளவில் குறிவைத்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் கடுனா மாநிலத்தில் உள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளியை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.
மட்டுமின்றி, அங்கு தங்கியிருந்த 165 மாணவர்களில் பெரும்பாலானவர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இதில் 25 மாணவர்கள் அந்த கும்பலிடம் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடத்தப்பட்ட மாணவர்களின் நிலை தொடர்பில் எந்த தகவலும் இல்லை என பள்ளி நிர்வாகம் கவலையுடன் தெரிவித்துள்ளது. இதனிடையே, கலக்கமடைந்த டசின் கணக்கான பெற்றோர்கள் திங்களன்று பள்ளி வளாகத்தில் கூடியிருந்தனர், சிலர் வாய்விட்டு அழுததுடன், பலர் கண்ணீருடன் காணப்பட்டனர்.
பள்ளிவளாகத்தில் கடத்தப்பட்ட மாணவர்களின் காலணிகள் மட்டும் சிதறிய நிலையில் காணப்பட்டன. இதனிடையே, மாநில பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் மாணவர்கள் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் அளிக்க முடியாத நிலை உள்ளதாக பொலிஸ் தரப்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.
நைஜீரியாவில் டிசம்பர் முதல் சுமார் 1,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டாலும், 150 க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.