மரகதச் சுரங்கத்தை சிறைப்பிடித்த ஆயுதமேந்திய கும்பல்: 50 தொழிலாளர்கள் பிணைக் கைதிகளாக அடைப்பு
கொலம்பியாவின் போயாகாவில் உள்ள மரகத சுரங்கம் ஒன்றை துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று சிறை பிடித்துள்ளது.
50 பிணைக் கைதிகள்
கொலம்பியாவின் போயாகாவில், மரபி நகராட்சியில் உள்ள மரகதச் சுரங்கம் ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய குழு அங்கிருந்த 50 தொழிலாளர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட எஸ்மெரெல்டாஸ் சாண்டா சுரங்க நிறுவனம்(Esmereldas Santa Rosa mining) வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்க ஆலையை ஆயுதமேந்திய குழு ஒன்று தாக்கி, அங்கிருந்த 50 தொழிலாளர்களை விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையை பொலிஸார் நகர்த்தி வருவதால், தொழிலாளர்களின் அன்புக்குரியவர்கள் அமைதியாக இருக்கும்படி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
காவல்துறையினர் தீவிரம்
இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட சுரங்கத்தை தேசிய காவல்துறை மற்றும் தேசிய ராணுவம் சுற்றி வளைத்துள்ளனர், அத்துடன் தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
நாட்டின் முக்கியமான சுரங்க வலையமைப்பில் கடந்த மாதம் மற்றொரு நெருக்கடி ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.