38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்ட வீரரின் உடல்., முழு இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
சியாச்சினில் காணாமல் போன இந்திய ராணுவ வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது.
ரோந்துப் பணியின்போது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன அந்த ராணுவ வீரர் யார் என அடையாளம் காணப்பட்டது.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர் ஒருவரின் உடல் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சியாச்சினில் உள்ள பழைய பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்டது.
அவர், 19 குமாவோன் படைப்பிரிவைச் சேர்ந்த சந்திரசேகர் ஹர்போலாவின் (Chandrashekhar Harbola) உடல் என ராணிகேட்டில் உள்ள சைனிக் குழு மையம் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் கண்டது.
ஹர்போலா 1984-ல் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடுவதற்காக 'ஆபரேஷன் மேக்தூத்' க்காக உலகின் மிக உயரமான போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட துருப்புக்களில் ஒரு வீரராக இருந்தார்.
ரோந்து பணியின் போது பனிப்புயலில் சிக்கினர். 15 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற ஐவரின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை, அவர்களில் ஹர்போலாவும் ஒருவர்.
அல்மோராவைச் சேர்ந்த இவரது மனைவி சாந்தி தேவி தற்போது சரஸ்வதி விஹார் காலனியில் வசித்து வருகிறார். அவரது உடல் திங்கள்கிழமை தாமதமாக வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Image: HT Photo
ஹர்போலாவின் வீட்டுக்குச் சென்ற ஹல்த்வானி சப்-கலெக்டர் மணீஷ் குமார் மற்றும் தாசில்தார் சஞ்சய் குமார் ஆகியோர், முழு ராணுவ மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
ஹர்போலா காணாமல் போனபோது, இருவருக்கும் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகியிருந்தது, அப்போது சாந்திக்கு வயது 28. அவர்களது மூத்த மகளுக்கு நான்கு வயது, இளையவளுக்கு ஒன்றரை வயது என சாந்தி தேவி கூறினார்.
சாந்தி தேவி, ஹர்போலா கடைசியாக 1984 ஜனவரியில் வீட்டிற்கு வந்ததாகவும், அந்த சமயத்தில் அவர் விரைவில் திரும்புவதாக உறுதியளித்ததாகவும் கூறினார். எவ்வாறாயினும், குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதிகளை விட நாட்டிற்கான தனது சேவைக்கு முன்னுரிமை அளித்ததால், தனது கணவர் குறித்து பெருமைப்படுவதாக சாந்தி தேவி கூறினார்.
அல்மோராவில் உள்ள துவாரஹத்தைச் சேர்ந்த ஹர்போலா, 1975-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபகுதியில், மற்றொரு சிப்பாயின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் அவரது அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.