ஜேர்மனிக்கு சென்றுகொண்டிருந்த 'கோஸ்ட் விமானம்' கடற்கரையில் விபத்து: பயணிகள் மாயம்
ஜேர்மனிக்கு சென்றுகொண்டிருந்த தனியார் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த நான்கு பேரும் மாயமானதால் தேடுதல் பணி நடைபெற்றுள்ளது.
ஜேர்மனியில் தரையிறங்கவிருந்த நான்கு பேரை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் லாட்வியா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானம் அதன் செயல்பாட்டை இழந்து, எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளாகும் வரை, தன்னியக்க பைலட் அமைப்பில் பறந்ததால் இந்த விமானம் 'கோஸ்ட் விமானம்' என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த தனியார் ஜெட் விமானம், ஸ்பெயின் மற்றும் கொலோன் இடையே பறந்து கொண்டிருந்தது, ஆனால் அதன் வழித்தடம் மாற்றியபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று லாட்வியன் சிவில் ஏவியேஷன் ஏஜென்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் வடக்கு ஐரோப்பா முழுவதும் தொடர்ந்து பறந்து கொண்டிருந்தபோது, ஜேர்மனி, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள், விமான பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை என ஸ்வீடிஷ் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தலைவர் லார்ஸ் ஆண்டன்சன் தெரிவித்தார்.
Cessna 551 ரக விமானம், பால்டிக் கடலில் ஸ்வீடிஷ் வான்வெளியில் பறந்து, உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு (1800 GMT) வென்ட்ஸ்பில்ஸ் கடலில் விழுந்து நொறுங்கியது.
விமானம் லாட்வியன் கடற்கரையை நெருங்கும் வரை ஒப்பீட்டளவில் சீராக பறந்தது, அது விரைவாக உயரத்தை இழந்தது. பின்னர் எரிபொருள் தீர்ந்தபோது செயலிழந்தது என்று அன்டன்சன் கூறினார்.
விமானத்தில் இருந்த நால்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
விபத்து நடந்த இடத்தில் லாட்வியா, லிதுவேனியா மற்றும் ஸ்வீடனில் இருந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் மீட்புக் குழுக்கள் பணிபுரிந்து வருவதாக லாட்வியன் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை மனித எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அன்டன்சன் மேலும் கூறினார். அந்த விமானம் திசைதிருப்பப்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
தற்போது "எங்களிடம் எந்த விளக்கமும் இல்லை, என்ன நடந்தது என்பது பற்றி நாங்கள் ஊகிக்க மட்டுமே முடியும்.." என்று அவர் கூறியுள்ளார்.