வங்கி ஊழியரின் விலையுயர்ந்த தூக்கம்! 2012 தவிர்க்கப்பட்ட மிகப்பெரிய இழப்பு: மீண்டும் இணையத்தில் வைரல்
ஜேர்மனியில் சோர்வடைந்த வங்கி ஊழியர் ஒருவர் தவறுதலாக பிரம்மாண்டமான தொகையை பரிமாற்றம் செய்ய இருந்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விலையுயர்ந்த தூக்கம்
கடந்த 2012ம் ஆண்டு ஜேர்மன் வங்கியில் சோர்வடைந்த ஊழியர் ஒருவர் நிதி பரிவர்த்தனையை செய்து கொண்டிருக்கும் போது, தனது விரலை கணினி விசையின் மீது வைத்து தூங்கியுள்ளார்.
இந்த சிறிய தவறு அவரை 64.20 யூரோக்களை மாற்றுவதற்குப் பதிலாக, 222,222,222.22 யூரோக்கள் (சுமார் 222 மில்லியன் யூரோக்கள்) தவறுதலாக பரிமாற்றம் செய்யும் மிகப்பெரிய தவறுக்கு அழைத்து சென்றது.
அதிர்ஷ்டவசமாக, ஒரு விழிப்புணர்வுள்ள சக ஊழியர் இந்த மிகப்பெரிய தவறை கண்டுபிடித்து, இறுதி செய்வதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தினார்.
சரியான நேரத்தில் தலையிட்டதால் வங்கிக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படுவதை தடுத்தது.
இருப்பினும் இந்த சம்பவம் ஒரு சட்டப் போராட்டத்தை தூண்டியதுடன் வங்கியின் செயல்பாட்டு நடைமுறைகளில் உள்ள குறிப்பிடத்தக்க குறைபாடுகளை வெளிப்படுத்தியது.
பணி நீக்கம் செல்லாது
ஊழியரின் பணியை மேற்பார்வையிட்ட மேற்பார்வையாளர், தவறை கண்டறிய தவறியதற்காக சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளார்.
ஆனால் ஜேர்மன் மாநில நீதிமன்றம் பின்னர் இந்த முடிவை மாற்றி, பணிநீக்கம் நியாயமற்றது என்று தீர்ப்பளித்தது.
மேலும் ஊழியரின் தவறான நடத்தை அல்லது கடுமையான கவனக்குறைவு ஆகியவற்றை குறிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று வலியுறுத்தினர்.
பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வமான எச்சரிக்கை போதுமான நடவடிக்கையாக இருந்திருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் நீதிமன்றத்தில் மேற்பார்வையாளர் சம்பந்தப்பட்ட ஊழியர் தினமும் நூற்றுக்கணக்கான பரிவர்த்தனைகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய கடுமையான அழுத்தத்தை எதிர் கொண்டதாகவும், பெரும்பாலும் முழுமையான ஆய்வுக்கு குறைந்த நேரமே இருந்ததாகவும் ஒப்புக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |