RCB அணிக்கு தடையா? 11 பேர் உயிரிழப்புக்கு ஆர்சிபியே காரணம் - வெளியான தீர்ப்பாய அறிக்கை
RCB வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்புக்கு ஆர்சிபியே காரணம் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
11 பேர் உயிரிழப்பு
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வரும் நிலையில், முதல்முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது.
இதனை கொண்டாடும் வகையில், கடந்த ஜூன் 4 ஆம் திகதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதனை பார்வையிட, லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே திரண்டதால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இந்த பணியிடை நீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கூடுதல் ஆணையர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஆர்சிபியே காரணம்
இது தொடர்பாக தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில், "RCB அணிதான் 3 முதல் 5 லட்சம் பேர் அந்த இடத்தில் கூடுவதற்கு முதல் பொறுப்பு என்று தெரிகிறது. RCB அணி காவல்துறையிடம் உரிய அனுமதியை அல்லது ஒப்புதலைப் பெறவில்லை.
அவர்கள் திடீரென்று சமூக ஊடகங்களில் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டதால், பொதுமக்கள் ஒரே நேரத்தில் அந்த இடத்தில் ஒன்று கூடினர்.
ஜூன் 4 ஆம் திகதி அன்று நேர பற்றாக்குறை இருந்ததால், காவல்துறையினரால் உரிய ஏற்பாடுகளைச் செய்ய போதுமான நேரம் வழங்கப்படவில்லை. RCB அணி எந்த முன் அனுமதியும் இல்லாமல் இந்த விஷயத்தைச் செய்துள்ளது.
காவல்துறை ஊழியர்களும் மனிதர்கள் தான்; அவர்கள் கடவுள் அல்ல, மந்திரவாதியும் அல்ல. மேலும் ஒரு விரலை தேய்த்தால் மட்டுமே விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அலாவுதீன் போன்ற மந்திர சக்திகளும் அவர்களிடம் இல்லை," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "இது ஆர்சிபியின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு பிசிசிஐதான் பொறுப்பு. இறுதியில், பிசிசிஐ நடவடிக்கை வேண்டியிருக்கும். நாங்கள் அமைதியாகப் பார்வையாளராக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, RCB அணிக்கு ஐபிஎல் தொடரில் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |