இளமையாகவே வாழ முயற்சிக்கும் பில்லியனர் - குணப்படுத்த முடியாத நோயால் பாதிப்பு
இளமையாகவே வாழ பல முயற்சிகளை செய்துவரும் பில்லியனர் ஒருவர், குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பில்லியனர் மற்றும் தொழிலதிபர் பிரையன் ஜான்சன், தனது உடலை இளமையாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளார்.
48 வயதான இவர், “ப்ளூபிரிண்ட்” எனப்படும் திட்டத்தின் மூலம் தினசரி 54 வகை சப்பிளிமென்ட்ஸ், கடுமையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மற்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, தனது உடலை 18 வயது இளைஞனின் நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் சமீபத்தில் அவர் “ஆட்டோஇம்யூன் காஸ்ட்ரைடிஸ்” எனப்படும் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது.

இந்த நோய் வயிற்றின் சுவரை தாக்கி, ஊட்டச்சத்து குறைபாடு, இரத்தச்சோகை, மற்றும் நீண்ட காலத்தில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது.
ஜான்சன் தனது சமூக ஊடகங்களில், “என் வயிறு என்னையே சாப்பிடுகிறது” எனக் கூறியுள்ளார். அவர் தனது மருத்துவக் குழுவுடன் இணைந்து, இந்த நோய்க்கு தீர்வு காண முயற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை, அறிகுறிகளை மட்டுமே கட்டுப்படுத்த முடிகிறது.
அவரது வாழ்க்கை முறையில், தினசரி 1,977 கலோரி மட்டுமே உட்கொள்வது, காலை 6 மணி முதல் 11.30 மணி வரை உணவு, இரவு 8.30 மணிக்குள் உறக்கம், மற்றும் 30 மருத்துவர்களின் கண்காணிப்பில் பரிசோதனைகள் ஆகியவற்றை பின்பற்றிவருகிறார்.
சிலர் இவரது முயற்சியை “அறிவியல் முன்னேற்றம்” என பாராட்டினாலும், பலர் “இயற்கையை எதிர்த்து போராடும் வீண் முயற்சி” என விமர்சிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |