கிரெட்டா துன்பெர்க்குடன் காஸா நோக்கி பயணப்பட்ட படகு மீது ட்ரோன் தாக்குதல்
ஸ்வீடன் சமூக ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க்குடன் காஸா நோக்கி பயணப்பட தயாரான படகு ட்ரோன் தாக்குதலில் தீ பற்றியெரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன், பாலஸ்தீன ஆதரவு 350 ஆர்வலர்களுடன் படகு ஒன்றில் கிரெட்டா துன்பெர்க் பயணப்பட தயாராகி வந்தார். இந்த நிலையில் ஞாயிறன்று வெளியான சில புகைப்படங்களில், 22 வயதான கிரெட்டா துன்பெர்க்கை சுற்றி பெரும் கூட்டம் காணப்பட்டது.
குறித்த புகைப்படமானது துனிசியா நாட்டின் துறைமுகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என பேசத் தொடங்கிய கிரேட்டா, கடலுக்கு அப்பால் ஒரு இனப்படுகொலை நடக்கிறது, இஸ்ரேலின் கொலை இயந்திரத்தால் ஒரு பெரிய பட்டினிச்சாவு முன்னெடுக்கப்படுகிறது என்றார்.
ஆனால் தற்போது கிரேட்டாவுடன் பயணப்படும் Yasemin Acar என்ற ஆர்வலர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொளி ஒன்றில், ட்ரோன் தாக்குதலில் சிக்கியுள்ளதாகவும், படகு தீ பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் அனைவரும் நலமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது என்றும், இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து மிரட்டல் விடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துனிசியப் பகுதியில் பொதுமக்களுடன் சென்ற படகை அவர்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளனர். இது காசா மீதான தாக்குதல், காரணம் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை என்றார்.
கிரேட்டா நாடுகடத்தப்பட்டார்
ஏற்கனவே கிரேட்டா குழுவினர் ஒருமுறை காஸாவில் தரையிறங்குவதை கடுமையாக எதிர்த்த இஸ்ரேல், தன்னார்வலர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி, கைது செய்தது.
ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில் கிரேட்டா நாடுகடத்தப்பட்டார். அப்போதும் எரிச்சலூட்டும் பொருட்களை தெளிக்க ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக இஸ்ரேல் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தற்போது இரண்டாவது முறையாக கிரேட்டா மற்றும் தன்னார்வலர்கள் குழு காஸா நோக்கி பயணப்பட தயாராகி வருகின்றனர். மொத்தம் 44 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களுடன் 20 படகுகள் காஸா நோக்கிப் பயணப்பட உள்ளது.
ஞாயிறன்று புறப்பட திட்டமிட்டிருந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக பயணம் தாமதமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |