நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் லஃப்பரோ பகுதியை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நள்ளிரவில் மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சோவர் ஆற்றில் சடலம்
லஃப்பரோ பகுதியை சேர்ந்த 20 வயது ஆரியன் சர்மா என்பவர் கடந்த நவம்பர் 22 ஆம் திகதி திடீரென்று மாயமானார். விசாரணையில், நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் Meadow Lane பகுதியில் அவர் நடந்து செல்வது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.

மட்டுமின்றி, பல்கலைக்கழக விடுதியில் இருந்து அவர் சம்பவத்தன்று சுமார் 9.30 மணியளவில் வெளியேறியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், திடீரென்று ஆரியன் மாயமான சம்பவம், குடும்பத்தினரை மொத்தமாக உலுக்கியது.
அவர் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றே குடும்பத்தினர் வலியுறுத்தினர். ஆனால், அருகிலுள்ள சோவர் ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை லெய்செஸ்டர்ஷயர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அடையாளம் காணும் பணி
அவர் ஆரியனாக இருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. சடலத்தை முறைப்படி அடையாளம் காணும் பணி இன்னும் நடைபெறவில்லை, அதே நேரத்தில் சிறப்பு நிபுணர் குழுக்கள் ஆரியனின் குடும்பத்திற்கு ஆதரவளித்து வருகின்றன.
பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட லஃப்பரோ மாணவரைத் தேடி விரிவான தேடுதல் நடவடிக்கைகள் நடத்தப்பட்ட நிலையில், ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22 ஆம் திகதி ஆரியன் மாயமான நிலையில், டிசம்பர் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சோவர் ஆற்றில் ஒரு சடலம் காணப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |