வெளிநாட்டில் கைதான பிரபலமான இந்திய தம்பதி: பல மில்லியன் டொலர் முறைகேடும் அம்பலம்
பாலிவுட் பாடகியும் அவரது கணவரும் பல மில்லியன் டொலர் முறைகேடு தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ICE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ICE தடுப்பு முகாமில்
ICE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சித்தார்த்த முகர்ஜி மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோர் முதல் நிலை திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
இவர்கள் இருவரும் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 4 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக பெடரல் அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையிலேயே கைதாகியுள்ளனர்.
சித்தார்த்த முகர்ஜி தற்போது ஃபோர்ட் வொர்த்தின் தெற்கே உள்ள ஒரு ICE தடுப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முகர்ஜி தம்பதி வடக்கு டெக்சாஸில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களுக்கு என நற்பெயரை உருவாக்கியிருந்தனர்.
ஆனால் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு, சுமார் 100 முதலீட்டாளர்களை ஏமாற்றியது பெடரல் அதிகாரிகளின் விசாரணையில் அம்பலமானது. 2024ல் தம்பதி ஒன்று அதிகாரிகளை நாடி, ரியல் எஸ்டேட் திட்டம் ஒன்றில் இணைந்து 325,000 டொலர் தொகையை இழந்ததாக புகார் அளித்ததை அடுத்தே முகர்ஜி தம்பதி விசாரணை வட்டத்தில் முதல் முறையாக வந்துள்ளனர்.
யூலெஸ் காவல் துறையின் விசாரணை அதிகாரி பிரையன் பிரென்னன் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கையில், முகர்ஜி தம்பதியின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
99 ஆண்டுகள் வரை
இதனையடுத்து அவரே பெடரல் அதிகாரிகளின் தலையீடு இந்த வழக்கில் தேவை என கோரியுள்ளார். அவர்களின் ஒருங்கிணைந்த விசாரணையில் 4 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை முகர்ஜி தம்பதி ஏமாற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர்கள் மட்டுமே புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த விவகாரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் தற்போது நம்புகின்றனர்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 99 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். முகர்ஜி தம்பதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் தேடி வந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர், இருப்பினும் பெடரல் தரவுகளில் அவர்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |