இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை தெரிவு செய்து நெருக்கடியில் சிக்கிய ஜனாதிபதி
விலை குறைவான ஃபைஸர் தடுப்பூசியை விடுத்து இந்தியாவின் கோவாக்சினை தெரிவு செய்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
பிரேசிலில் கொரோனா பரவலால் மில்லியன் கணக்கானோர் மரணமடைந்த நிலையில் தடுப்பூசி விவகாரத்தில் ஜனாதிபதி ஊழல் செய்துவிட்டதாக அரசாங்கத்துக்கு கண்டனக் குரல் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டாவும், லூயிஸ் மிராண்டாவும் முதன்முதலில் சந்தேகம் எழுப்பியதுடன் வெள்ளிக்கிழமை விசாரணை ஆணையம் முன்பு சாட்சியமும் அளித்துள்ளனர்.
விலை மலிவான பைஸர் தடுப்பூசி இருக்க, சுமார் 1.6 பில்லியன் ரெய்ஸ் ( 323 மில்லியன் டொலர்) அளவு செலவு செய்து இந்தியாவின் கோவாக்சினை கொள்முதல் செய்ய என்ன அவசியம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மட்டுமின்றி, பிரேசில் அரசுக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரேசிலின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனம் கோவாக்சின் ஒப்பந்தம் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரேசில் நாட்டுக்கு கோவாக்சின் விநியோகித்ததில் எவ்விதமான ஊழலும் நடக்கவில்லை.
அத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். மேடிசன் பயோடெக் நிறுவனம் எங்களின் சர்வதேச வர்த்தகத்தைக் கவனிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ, கோவாக்சின் ஒப்பந்தத்தில் எவ்வித சிக்கலும் இல்லை. அதிக விலைக்கு அந்தத் தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் இல்லை.
நான் ஊழல் கறைபடியாதவன். எனது அரசுக்குக் களங்கம் விளைவிக்கவே எதிர்க்கட்சிகள் இத்தகைய கட்டுக்கதைகளை முன்வைக்கின்றன என்று கூறியுள்ளார்.
இருப்பினும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை தொடங்கியுள்ளது.