கேரளாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35 போர் விமானம் நாடு திரும்புகிறது
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட பிரித்தானிய F-35B போர் விமானம், அடுத்த வார தொடக்கத்தில் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம்
இந்திய அதிகாரிகள் இந்த விவகாரத்தில் விவாதித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் அரபிக் கடலில் வழக்கமான விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அந்த விமானம்,
மோசமான வானிலை காரணமாக ராயல் கடற்படையின் முதன்மை விமானம் தாங்கி கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸுக்குத் திரும்ப முடியவில்லை. அந்த விமானம் உடனடியாக திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டது, அங்கு ஜூன் 14 அன்று பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த நிலையில் தற்போது பிரித்தானிய பொறியாளர்கள் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் நாட்களில் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அடுத்த வாரம் F-35B போர் விமானம் பிரித்தானியாவிற்குத் திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, விமானத்தின் தற்போதைய நிலை குறித்து மதிப்பிடுவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் பிரித்தானிய பொறியியல் குழு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தியது.
ஊகங்கள்
உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் சுமார் 115 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த ஸ்டெல்த் போர் விமானம், புறப்பட முடியாமல் சிக்கிக்கொண்டதிலிருந்து, சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மற்றும் கார்ட்டூன்களின் இலக்காக மாறியுள்ளது.
இதனிடையே, பொறியாளர்கள் விமானத்தை சரிசெய்யத் தவறினால், அந்த விமானம் பகுதியாக பிரிக்கப்பட்டு ஒரு சரக்கு விமானத்தில் கொண்டு செல்லப்படலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. இருப்பினும், பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் இந்த ஊகங்களை நிராகரித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |